அன்னிய செலாவணி மோசடி வழக்கு: மல்லையாவின் சொத்துகளை முடக்க டெல்லி கோர்ட்டு மீண்டும் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க டெல்லி கோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டது.

Update: 2019-03-23 22:45 GMT

புதுடெல்லி, 

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது நாட்டின் பல கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

இதில் டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மல்லையா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு மல்லையாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு எதிராக கடந்த 2017–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி கோர்ட்டு அறிவித்தது. அத்துடன் இந்த வழக்கில் பெங்களூருவில் உள்ள மல்லையாவின் சொத்துகளை முடக்கி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெங்களூரு போலீஸ் கமி‌ஷனருக்கு கடந்த ஆண்டு மே 8–ந்தேதி உத்தரவிடப்பட்டது.

அதன்படி மல்லையாவுக்கு சொந்தமான 159 சொத்துகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், ஆனால் அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை எனவும் பெங்களூரு போலீஸ் கமி‌ஷனர் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் மேலும் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் மல்லையா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் ஷெராவத், மல்லையாவின் பெங்களூரு சொத்துகளை ஜூலை 10–ந்தேதிக்குள் முடக்குமாறு மீண்டும் உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு ஜூலை 10–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்