சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீக்கத்துக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டை அணுகுமாறு கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

சபரிமலையில் கட்டுப்பாடுகளை நீக்கி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டையே அணுகுமாறு மாநில அரசை அறிவுறுத்தியது.

Update: 2019-03-25 21:05 GMT
புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. மேலும் சபரிமலையிலும் ஏராளமான இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

எனவே சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். இதனால் சமீபத்திய மகரவிளக்கு-மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் பயங்கர சிரமங்களை சந்திப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகள் கூறினர்.

எனவே இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை விசாரித்த ஐகோர்ட்டு சபரிமலையில் போலீசார் அமல்படுத்திய கட்டுப்பாடுகளை அகற்ற உத்தரவிட்டதுடன், அங்கு பக்தர்களை அனுமதிப்பதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியது.

ஆனால், ஐகோர்ட்டின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு (பெண்கள் அனுமதி) அளித்த தீர்ப்பின் வலிமையுடன் முரண்படுவதாக கூறி கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த தீர்ப்பை மாற்றியமைக்குமாறும் அதில் கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். எனினும் ஐகோர்ட்டின் உத்தரவை மாற்றியமைக்க வேண்டுமென்றால், மனுதாரர்கள் (கேரள அரசு) ஐகோர்ட்டையே அணுகலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அங்கு தகுந்த மனுவை தாக்கல் செய்து நிவாரணம் பெறுமாறும் கூறினர்.

இதைப்போல சபரிமலை விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மேலும் செய்திகள்