கனமழை, இடியை பொருட்படுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட காவலர்!

கனமழை, இடியை பொருட்படுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2019-04-01 08:00 GMT
கவுகாத்தி,

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நேற்று மாலை கனமழை பெய்தது. கனமழையுடன் இடியும் கடுமையாக இருந்தது. மழையால், சாலைகளில் வெள்ளம் போல் நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில இடங்களிலும் கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

இதற்கு மத்தியில், கவுகாத்தியில் உள்ள பசிஸ்தா பகுதியில், மிதுன் என்ற போக்குவரத்து காவலர், இடி, மழையை பொருட்படுத்தாமல் துணிச்சலாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டது வாகன ஓட்டிகளுக்கு நெகிழ்ச்சியை அளித்தது.

அசாம் காவல்துறையும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டு காவலர் மிதுனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் புகழ்ந்து தள்ளினர். ரெயின்கோட் எதுவும் அணியாமல் காவலர் மிதுன் போக்குவரத்தை சீர் செய்தது, தனது பணியில் அவர் கொண்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். 

அசாம் டிஜிபி குலதர் சைகியாவும், காவலர் மிதுனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் மிதுனிடம் பேசி பாராட்டுக்களை தெரிவித்ததாக டுவிட்டரில் அசாம் டிஜிபி தெரிவித்து உள்ளார். கார்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள மஞ்சா என்ற இடத்தைச்சேர்ந்த மிதுன் தாஸ், அசாம் காவல்துறையில் 2015 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார்.

பல்வேறு இடங்களில், காவல்துறையினர் பொதுமக்களிடம் அதிகார அத்துமீறலுடன் நடப்பதாக பரவலாக செய்திகள் வெளியாகும் நிலையிலும், இது போன்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்கள் பலர் காவல்துறையில் இருப்பதாலே, மக்கள் நிம்மதியுடன் உலவ முடிகிறது எனவும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்