வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2019-04-17 17:05 GMT
புதுடெல்லி,

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் எதிர்பாராத விதமாக புழுதியுடன் பெய்த கனமழையினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார். இதனால் நேரிட்ட விபத்து சம்பவங்களில் இருமாநிலங்களிலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திலும் இடி, மின்னலுடன் கனமழை பல்வேறு இடங்களில் பெய்தது. அப்போது நேரிட்ட விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலங்களில் மழையினால் நேரிட்ட விபத்து சம்பவங்களில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் மகாராஷ்டிராவில் 3 பேர் மழைக்கு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடமாநிலங்களை திடீரென தாக்கிய இந்த புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு நாங்கள் துணை நிற்போம். மத்திய அரசு அனைத்து உதவிகளையும், ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்துவருவதுடன் கண்காணித்தும் வருகிறது. இந்த புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த புயல் மழையால் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்