மோடி பகல் கனவு காண்கிறார்: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ‘ரசகுல்லா’ தான் கிடைக்கும் - மம்தா பானர்ஜி கிண்டல்

மோடி பகல் கனவு காண்கிறார் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ரசகுல்லா தான் கிடைக்கும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-19 22:15 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தாக்சின் தினாஜ்பூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ரசகுல்லா தான் கிடைக்கும்” என கேலியாக பேசினார்.

இனிப்பு வகையில் ஒன்றான ரசகுல்லா வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமானதாகும். மேலும் மாணவர்கள் தேர்வில் பூஜ்யம் வாங்கினால் உள்ளூர் மக்கள் பூஜ்யத்தை ரசகுல்லா என கூறி கேலி செய்வது வழக்கமாகும்.

கூட்டத்தில் தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்தமாக 100 இடங்களுக்கு மேல் கிடைக்காது. குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றிபெறாது” என்றார்.

மேலும் செய்திகள்