பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேச்சு

பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக பதிலடி கொடுக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பத்ராவதி தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா கூறினார்.

Update: 2019-04-20 23:09 GMT
சிவமொக்கா,

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் சிவமொக்கா, தார்வார், கலபுரகி உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரான எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சிவமொக்காவுக்கு வந்தார். அவர் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்ராவதியில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று ராகவேந்திராவுக்கு ஓட்டு வேட்டையாடினார். அவர் பிரசாரம் செய்த வாகனம் மலர்களால் ரதம் போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அவர் ஊர்வலமாக சென்றபோது சாலையின் இருபுறமும் கூடியிருந்த பா.ஜனதாவினர் மோடி... மோடி... என கோஷம் எழுப்பினர். மேலும் அமித்ஷா ஊர்வலமாக வந்தபோது மலர்களை தூவியும், டிரம்ஸ் அடித்து நடனமாடியும் பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சுமார் 40 நிமிடங்கள் அமித்ஷா திறந்த வாகனத்தில் சென்றபடி ராகவேந்திராவுக்கு ஓட்டு வேட்டையாடினார். அவருடன் பா.ஜனதா வேட்பாளர் ராகவேந்திரா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் உடன் இருந்தனர்.

அமித்ஷா அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

இது நரேந்திரமோடியை பிரதமராக தேர்வு செய்ய நடக்கும் தேர்தல். நாங்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் ஏன் கூறுகிறோம் என்றால், அப்போது தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.

நாட்டின் பாதுகாப்புக்கும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவும், மோடியை மீண்டும் பிரதமராக்குங்கள். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய ஆதரவு கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்