மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவாரா? இன்று முடிவு எட்ட வாய்ப்பு

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவது தொடர்பாக இன்று முடிவு எட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-05-01 07:14 GMT
ஜெனீவா,

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரை நடத்தி, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஏற்கனவே எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன. சீனா முட்டுக்கட்டை போட்டதே இதற்கு காரணம்.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன.

அதுவும் சீனாவின் முட்டுக்கட்டையால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக இதுதொடர்பாக பயன்படுத்தப்படுகிற வாசகங்களில் சில மாற்றங்களை செய்தால், சம்மதிக்கிறோம் என சீனா முன்வந்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக சமரச முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்  நேற்று முன்தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினர்.

இதற்கு மத்தியில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிக்கும் விவகாரம் உரிய முறையில் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்படும் என்று சீனா தெரிவித்தது. இந்த நிலையில், ஐ.நா.வின் தடை விதிக்கும் குழு இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது.

அல்கொய்தா தடைக்குழு கவுன்சிலான இதில், மசூத் அசாருக்கு தடை விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கும் என தெரிகிறது. சீனா, தனது நிலைப்பாட்டை மாற்றி மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்குமா? என்பது இன்று தெரியவரும் எனவும் அங்குள்ள வட்டார தகவல்கள் கூறுகின்றன. 

முன்னதாக, மசூத் அசாரை பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் அவரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஆதரவளித்தன. இருப்பினும், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து 4- முறை மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிக்க முட்டுக்கட்டை போட்டது நினைவு கொள்ளத்தக்கது. 

மேலும் செய்திகள்