‘தமிழர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோவது உண்மைதான்’ - கெஜ்ரிவால் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு

தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதில் தவறில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.

Update: 2019-05-04 21:47 GMT
புதுடெல்லி,

நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக ஆதரவு தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரகாஷ்ராஜ் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் அவர் ஒரு வாரம் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரிவினையும், வெறுப்பு அரசியலும் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த வேளையில், நாட்டின் ஜனநாயகத்தை காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சுகாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்னை கவர்ந்து உள்ளன.

கடந்த 70 ஆண்டுகளில் பா.ஜனதாவும், காங்கிரசும் நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றன. ஆம் ஆத்மி போன்ற கட்சிகளால் மட்டுமே நாட்டை அதில் இருந்து மீட்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, “டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 500 தமிழக மாணவர்கள் சேர்வதால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறாரே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று தமிழக நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பிரகாஷ்ராஜ், “கெஜ்ரிவால் அப்படி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுவது உண்மைதான். டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்” என்று பதில் அளித்தார்.

உடனே, “தமிழ்ப்படங்களில் நடித்து பிரபலமான நீங்கள் இப்படி பேசுகிறீர்களே” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “நான் தமிழன் அல்ல. கன்னடத்துக்காரன்” என்று பிரகாஷ்ராஜ் பதில் கூறினார்.

பிரகாஷ்ராஜ் இப்படி கூறியதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், டெல்லி தமிழ் மாணவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் திலிப் பாண்டேவை ஆதரித்து பிரகாஷ் ராஜ் நேற்று மாலையில் பிரசாரம் மேற்கொண்டார். புதுடெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது பிரசாரம் நடக்கிறது.

மேலும் செய்திகள்