கேரளாவில் தாய்-மகள் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் கைது

கேரளாவில் தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-05-15 22:57 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை மாராரி முட்டத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி லேகா (வயது 43). இவர்களின் மகள் வைஷ்ணவி (19). கல்லூரியில் படித்து வந்தார்.

நெய்யாற்றின் கரையில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் சந்திரன் வீட்டுக்கடன் வாங்கி இருந்தார். அதை முறையாக செலுத்தாததால், வீட்டை ஜப்தி செய்யப்போவதாக அடிக்கடி வங்கியில் இருந்து அதிகாரிகள் கூறியதால் நேற்று முன்தினம் லேகாவும், வைஷ்ணவியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கடிதம்

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொண்ட அறையின் சுவரில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டு இருந்தது.

அதில், கணவர் சந்திரன், அவருடைய தாயார் கிருஷ்ணம்மா (80) மற்றும் உறவினர்கள் சாந்தா, காசி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். வங்கியில் வாங்கிய கடனை கணவர் சந்திரன் முறையாக திருப்பி செலுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் மீது சூனியம் வைக்க முயற்சி செய்தனர். மேலும் எனக்கு விஷம் கொடுத்து கொலை செய்யவும் முயன்றனர். வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த என் கணவர் கேரளாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்ததும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதத்தில் இருவரின் கையெழுத்தும் இருந்தது.

திடீர் திருப்பம்

இருவரும் தற்கொலை செய்து கொள்ள வங்கி எந்த வகையிலும் காரணம் இல்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. திடீர் திருப்பம் ஏற்படுத்திய இந்த வழக்கில் சந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

முன்னதாக தாய்-மகள் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக அந்த வங்கி முன்பாக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்