தொலைபேசியில் பேச்சு பயங்கரவாதம் இல்லா சூழலை உருவாக்க வேண்டும் இம்ரான்கானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

அமைதி மற்றும் வளத்துக்காக இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-05-26 23:15 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் பிரதமர் மோடிக்கு பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் தனது டுவிட்டர் தளத்தில் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று அவர் தொலைபேசி மூலம் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். இந்த தொலைபேசி அழைப்புக்காகவும், தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கூறியதற்காகவும் அப்போது இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, அண்டை நாடுகள் சார்ந்த தனது அரசின் செயல்பாடுகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்து பேசியதுடன், வறுமை ஒழிப்புக்கு இணைந்து போராடுவது என்ற முந்தைய தனது பரிந்துரையையும் இம்ரான்கானிடம் குறிப்பிட்டார்.

மேலும் இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்துக்கு, இந்த பகுதியில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லா சூழலை உருவாக்க வேண்டும் எனவும், நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் இம்ரான்கானிடம் மோடி வலியுறுத்தினார். இந்த தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

இதைப்போல பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் இடையிலான தொலைபேசி உரையாடலின்போது, இருநாட்டு மக்களின் நன்மைக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை மோடியிடம் இம்ரான்கான் தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் கூறியுள்ளது.

மேலும் தெற்கு ஆசியாவின் அமைதி, வளம் மற்றும் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவதை ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாகவும் இம்ரான்கான் கூறியதாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறியுள்ளார்.

இதற்கிடையே மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷித் மற்றும் நேபாளத்தின் முன்னாள் பிரதமர் மாதவ் நேபாள் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்