மோடி தலைமையில் புதிய அரசு இன்று பதவி ஏற்பு: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

மோடி தலைமையில் இன்று புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2019-05-30 03:56 GMT
புதுடெல்லி,

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைக்கிறது.  நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்து உள்ளார். இன்று பதவி ஏற்கிறார்

அதை ஏற்று மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக் கிறார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆகிறார்.
பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். மோடியுடன் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி  கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்.

மோடியின் அழைப்பை ஏற்று ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளான வங்காளதேசத்தின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரும் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும், தாய்லாந்து நாட்டின் பிரதிநிதியும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

வழக்கமாக புதிய அரசு பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும். ஆனால் அந்த மண்டபத்தில் சுமார் 500 பேர் மட்டுமே அமர முடியும்.ஆனால் இந்த முறை மோடி அரசு பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட சுமார் 8,000 பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் இடவசதியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்திய வரலாற்றில் பிரதமர் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும். பதவி ஏற்பு விழா 1½ மணி நேரம் நடைபெறும் விழா முடிந்ததும், அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளிக்கிறார்.

பதவி ஏற்பு விழா நடைபெறுவதை ஒட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோடி மற்றும் பிற தலைவர்கள் செல்லும் பாதைகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச்சுடுவதில் திறன் பெற்ற ஸ்னைப்பர்களும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

புதுடெல்லியில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் பொதுமக்கள்  போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்