பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சாவு - 110 மணி நேர போராட்டம் வீணானது

பஞ்சாபில் 110 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்தான்.

Update: 2019-06-11 01:10 GMT
சண்டிகார்,

பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை, 110 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது. இந்த நிலையில் அந்த குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் அருகே உள்ள பகவன்புரா கிராமத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை பதேவீர் சிங். இந்த குழந்தை கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தனது தாயுடன் விளையாடிக்கொண்டு நடந்து வந்தது. அப்போது அந்த பகுதியில் துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றில் அந்த குழந்தை தவறி விழுந்துவிட்டது.

இதைப்பார்த்த அந்த குழந்தையின் தாய் உடனடியாக மீட்க முயன்றார். ஆனால் அவரால் மீட்க முடியவில்லை.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 150 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 125-வது அடியில் குழந்தை சிக்கி இருந்ததால் மீட்பு பணி சவாலாக மாறியது. ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டும் பணியை தொடங்கி, இரவு பகலாக தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது.

அந்த குழந்தைக்கு உணவு, தண்ணீர் எதுவும் வழங்கப்படவில்லை. சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் வாயு மட்டும் மருத்துவக் குழுவினரால் ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மயங்கிய நிலையில் அந்த குழந்தை மீட்கப்பட்டது.

அங்கு மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை சண்டிகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் மீட்புக்குழுவினரின் 110 மணி நேர போராட்டம் வீணானது.

பலியான பதேவீர் சிங்குக்கு நேற்று முன்தினம்தான் 2-வது பிறந்தநாள் ஆகும். பிறந்த நாளை கொண்டாடி இருக்க வேண்டிய குழந்தை உயிரிழந்ததை நினைத்து பெற்றோர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

மேலும் செய்திகள்