ஓமனை நோக்கி நகர்ந்தது வாயு புயல்: 24 மணி நேரம் கண்கானிக்க விஜய் ரூபானி உத்தரவு

குஜராத்தை அச்சுறுத்த வந்த வாயு புயல் திசை மாறி ஓமனை நோக்கி நகர்ந்தது.

Update: 2019-06-13 15:22 GMT
மும்பை,

நாடு முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது மழை பெய்யும் என காத்திருக்கின்றனர் மக்கள். இந்நிலையில் மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக அரபிக்கடலில் உருவானது வாயு புயல்.

இந்த புயல் குஜராத்தை தாக்கும் என முதலில் கூறப்பட்டது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 

இந்நிலையில் வாயு புயல் குஜராத்தை தாக்காது என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.  வாயு புயல் திசை மாறி  ஓமனை நோக்கி நகர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது.  ஆனாலும் குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது. 

இதனையடுத்து இன்னும் 24 மணி நேரம் முன்னெச்சரிக்கையாக இருக்க அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.  10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் மாகிம் கடற்கரை பகுதியில் பலத்த மழை மற்றும் காற்று வீசுவதால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்