காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை- பாஜக முடிவு

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜ. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Update: 2019-06-18 10:29 GMT
புதுடெல்லி,

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது. சமீபத்தில் நடந்த  நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை விட தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து 2-வது தடவையாக பறிபோக உள்ளது.

பாராளுமன்ற  உறுப்பினர்களில் 10 சதவீதம் இடங்கள் அதாவது 55 இடங்களைப் பெற்றால்தான் ஒரு கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தைப் பெற தற்போது 3 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர். 

சரத்பவாரின்  தேசியவாத காங்கிரசை காங்கிரசுடன் இணைத்து இந்த எண்ணிக்கையை பெற காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, “பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மரியாதை உண்டு. எனவே எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்றார்.

பிரதமர் மோடி பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதற்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் பா.ஜ. மூத்த தலைவர்கள் இந்த விஷயத்தில் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் சலுகை காட்டக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளனர். அதன்படி காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜ. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்