ஒவ்வொரு குடிமகனின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.

Update: 2019-06-20 05:58 GMT
புதுடெல்லி,

 நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். அப்போது ஜனாதிபதி பேசியதாவது:- வாக்களித்து இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. மக்களவையில் முதல் முறையாக அதிக பெண்கள் இடம் பெற்றிருப்பது பெருமையானது.  இந்த மக்களவையில் அதிகம் பேர் முதல் முறை வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். ஒரு முறை வெற்றி பெற வைத்து ஆட்சியை ஏற்படுத்திய மக்கள், இந்த அரசுக்கு மற்றொரு வாய்ப்பை அளித்து இருக்கிறார்கள். மக்களின் அமோக ஆதரவால் கூடுதல் உத்வேகத்துடன் மக்களுக்கு பணியாற்றும். 

 தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.  வறட்சி பாதித்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.  சாதி, பேதமற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதே இலக்கு.  நகரங்களோடு கிராமங்களும் வளர்ச்சி பெற திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.  புதிய இந்தியாவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் . ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே அரசின் முக்கிய நோக்கம்.  மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இந்த ஆட்சி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடும்.  நாட்டுமக்களின் கனவுகளை நிறைவேற்ற இந்த அரசு முழு வீச்சில் செயல்படும். கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆட்சி தங்களுக்கானது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், உடல் நலம் என எல்லா துறைகளிலும் மக்களின் மேம்பாட்டுக்கு இந்த அரசு துணை நிற்கும்.

 கிராமப்புற வளர்ச்சிக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும். ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கை மேம்படவும் இந்த அரசு  பணியாற்றும்.  மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள் வளர்ச்சிக்கு இந்த அரசு பாடுபடும். மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்வோம். நாட்டின் வளர்ச்சிக்கு வலிமையான உள்கட்டமைப்பு அவசியம் என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்