தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்

தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

Update: 2019-06-20 13:33 GMT
2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தோல்வியை தழுவி ஆட்சியை இழந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இப்போது சந்திரபாபு நாயுடு வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் தெலுங்குதேசம் கட்சிக்கு மற்றொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் பா.ஜனதாவில் இணைவதாக தகவல் வெளியாகியது. சற்றுநேரத்திற்குள் அக்கட்சியின் எம்.பி.க்கள் ஒய்.எஸ். சவுத்ரி, சிஎம் ரமேஷ், டிஜி வெங்கடேஷ் பா.ஜனதாவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர். விரைவில் மற்றொரு எம்.பி. ஜிஎம் ராவ் பா.ஜனதாவில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பா.ஜனதாவின் நடவடிக்கைக்கு தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் நலனுக்காகவும், சிறப்பு அந்தஸ்துக்காக மட்டும்தான் பா.ஜனதாவுடன் எங்களுடைய போட்டியிருந்தது. நாங்கள் மத்திய அமைச்சரவை பொறுப்புகளை அதற்காக விட்டோம். இப்போது தெலுங்குதேசம் கட்சியை பலம் இழக்க செய்ய பா.ஜனதா மேற்கொள்ளும் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். தெலுங்குதேசம் கட்சிக்கு இதுபோன்ற நெருக்கடி ஒன்றும் புதிது கிடையாது. இதனால் பயப்படவேண்டியது எதுவும் இல்லை என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்