தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. இதை தடுக்க தவறியதற்காக மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து இருந்தது.

Update: 2019-07-04 22:34 GMT

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அசோக் பூ‌ஷண் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. முடிவில் பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தை செலுத்துமாறு மேகாலயா அரசுக்கு அறிவுறுத்தினர்.

அங்கு சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலக்கரியை அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் ஒப்புடைக்குமாறு கூறிய நீதிபதிகள், கோல் இந்தியா நிறுவனம் இந்த நிலக்கரியை ஏலமிட்டு அந்த தொகையை மாநில அரசுடன் இணைந்து அபராதமாக செலுத்துமாறு வலியுறுத்தினர்.

முன்னதாக, தங்கள் மாநிலத்தில் ஏராளமான சட்ட விரோத சுரங்கங்கள் செயல்பட்டு வருவதாக மேகாலயா அரசு அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்