எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கூடாது கர்நாடக சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு குமாரசாமி திட்டம்

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கர்நாடக சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-07-12 23:45 GMT
பெங்களூரு,

இதற்கிடையே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர குமாரசாமி திட்டமிட்டு உள்ளார். கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

இதற்கிடையே 10 பேரின் ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை என சபாநாயகர் ரமேஷ்குமார் நிராகரித்தார். இதனால் அந்த 10 எம்.எல்.ஏ.க்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ள சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 10 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் சபாநாயகர் முன் ஆஜராகி ராஜினாமா கடிதங்கள் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று முன்தினம் அவர்கள் மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு வந்து சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் மும்பைக்கு சென்றுவிட்டனர்.

அதன் பிறகு பேட்டியளித்த சபாநாயகர் ரமேஷ்குமார், ‘சட்ட வழிமுறைகளை பின்பற்றியும், மனசாட்சிக்கு உட்பட்டும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறினார்.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதாவது, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்க கூடாது என்றும், ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது. இதனால் கூட்டணி கட்சி தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே வேளையில் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று அவர்கள் மும்பையில் சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டப்படி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் மதியம் 12.50 மணிக்கு தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் ரமேஷ்குமார், இந்த சபையின் இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த இரங்கல் தீர்மானத்தின் மீது முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். அப்போது தற்போது அரசியல் நிலவரம் குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலையில், என்னுடைய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். முதலில் அதற்கு தேதியை நிர்ணயிக்க வேண்டும். எனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய விரும்பவில்லை.

அரசியல் சூழ்நிலை இவ்வாறு உள்ளதால் நான் இதை சொல்கிறேன். நான் தாமாக முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆட்சி அதிகாரம் நிரந்தரம் இல்லை என்பது எனக்கு தெரியும். சில எம்.எல்.ஏ.க்கள், தங்களுடைய நடவடிக்கையால் அரசியலில் குழப்பத்தை உருவாக்கியுள்ளனர். நான் எதற்கும் தயார். பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இவ்வாறு குமாரசாமி பேசினார்.

நேற்று சபை அலுவல் பட்டியலில் இரங்கல் தீர்மானம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு பா.ஜனதா உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து பிரச்சினை கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய கூட்டத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

இரங்கல் தீர்மானம் மீதான உறுப்பினர்களின் பேச்சு, மதியம் 3 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பிறகு சபையை வருகிற 15-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு துணை சபாநாயகர் கிருஷ்ணாரெட்டி ஒத்திவைத்தார்.

தற்போதைய சூழ்நிலையில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து பார்த்தால், சட்டசபையில் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணிக்கு 102 (நியமன உறுப்பினர் உள்பட) உறுப்பினர்களின் ஆதரவும், பா.ஜனதாவுக்கு 107 உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. இதை பார்க்கும்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி அடையும் நிலை உள்ளது.

ஆனால் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களில் ராமலிங்கரெட்டி, ரோஷன் பெய்க், முனிரத்னா, ஆனந்த்சிங் ஆகியோரிடம் முதல்-மந்திரி குமாரசாமி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்று அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்