தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி குறைய காரணம் என்ன? - மக்களவையில், தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததன் காரணம் குறித்து மக்களவையில், தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

Update: 2019-07-18 20:00 GMT
புதுடெல்லி,

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தமிழகத்தில் செயல்படும் சர்க்கரை ஆலைகள் குறித்து, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:-

சர்க்கரை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவிகள் அனைத்தும் செல்வதை தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் சுட்டி காட்டியதா? அதன் விவரம் என்ன? இதுகுறித்து மத்திய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.

கரும்பு உற்பத்தி குறைந்ததன் காரணமாக, தமிழக சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி 35 சதவீதமாக குறைந்ததா? தமிழகத்தின் சர்க்கரை தேவை 18 லட்சம் டன்னாக இருக்கும்போது, தமிழகத்தின் உற்பத்தி 8.5 லட்சம் டன்னாக உள்ளது. இதனால் தமிழக சர்க்கரை ஆலைகள் ஏற்றுமதி செய்ய முடியாதா? இந்த நிலைக்கான காரணங்கள் என்ன? 5 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 23 லட்சம் டன்னாக இருந்தது. சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் 3 அல்லது 4-வது இடத்தில் இருந்தது உண்மையா? தற்போது தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைந்ததற்கு காரணங்கள் என்ன? இதை சரி செய்ய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? இவ்வாறு தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்