கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல்

கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-07-22 05:38 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 15 எம்.எல்.ஏக்கள் அறிவித்தனர். 12 எம்.எல்.ஏக்கள்  மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர். இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சட்டசபையில் கூட்டணி அரசின் பலத்தை விட எதிர்க்கட்சியான பா.ஜனதாவின் பலம் அதிகமாக உள்ளது. பா.ஜனதாவின் பலம் 2 சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உள்ளது.

இப்பிரச்சினையால், கர்நாடகாவில் 2 வாரங்களாக உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று  சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்தார்.

அதைதொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. கவர்னர் 2 தடவை கெடு விதித்தும், வாக்கெடுப்பு நடக்கவில்லை. சபை திங்கட்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் கூடுகிறது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று பேசுகிறார்கள். இறுதியில் முதல்-மந்திரி குமாரசாமி பேசுகிறார். அவர் பேசி முடித்த பிறகு இன்று மாலை 6  மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, ராஜினாமா கடிதம் கொடுத்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் சம்மன் அனுப்பியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடக்கோரி, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுதாகர், நாகேஷ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.

மேலும் செய்திகள்