பிரணாப் முகர்ஜிக்கு “பாரத ரத்னா விருது” ஆகஸ்ட் 8-ம் தேதி வழங்கப்படுகிறது

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் மாதம் 8 -ம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

Update: 2019-07-28 14:55 GMT
புதுடெல்லி,

கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான  பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.  இதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணி ஆற்றியதற்காக  பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. 

இவர்களில் நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு, மறைவுக்கு பின் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரபல கல்வியாளர் மதன்மோகன் மாளவியா (மறைவுக்கு பின்) ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. 

பாரத ரத்னா விருது பெற்றுள்ள பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து இருந்தார்.  அதே போல் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு  ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.  ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு இந்த விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.

பாரத ரத்னா விருது பெற்றுள்ள மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவர் பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசில் நிதி, ராணுவம், வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார். திட்டக்கமிஷன் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்