பா.ஜனதா பெண் எம்.பி. பற்றி ஆட்சேப கருத்து: அசம்கான் எம்.பி. மன்னிப்பு கேட்டார்

பா.ஜனதா பெண் எம்.பி. பற்றி ஆட்சேபத்துக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சி எம்.பி. அசம்கான் மன்னிப்பு கேட்டார்.

Update: 2019-07-29 06:18 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் பா.ஜனதா பெண் எம்.பி. ரமா தேவி சபாநாயகர் இருக்கையில் இருந்து சபையை நடத்தினார். அப்போது, முத்தலாக் தடை மசோதா குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது.

அதன் மீது பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. அசம்கான், வேறு ஒரு எம்.பி.யை பார்த்து பேசினார். சபாநாயகர் இருக்கையில் இருந்த ரமா தேவி, “உறுப்பினர், சபாநாயகரை பார்த்துதான் பேச வேண்டும்” என்று கூறினார். அதற்கு அசம்கான், ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகளை தெரிவித்தார்.

அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. உடனே அசம்கான், “ரமா தேவி, என் சகோதரி போன்றவர்” என்று கூறினார்.

இருப்பினும், அவரது பேச்சுக்கு மறுநாளும் சபையில் கண்டனங்கள் குவிந்தன. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட கட்சி பேதமின்றி பல்வேறு பெண் எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். அசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கண்டன அறிக்கை வெளியிட்டார்.

நாலாபுறமும் எதிர்ப்பு எழுந்தநிலையில், அசம்கான் எம்.பி. நேற்று மக்களவையில் மன்னிப்பு கேட்டார். மக்களவை கூடியவுடன், சபாநாயகர் ஓம் பிர்லா, அசம்கான் பேச அனுமதி அளித்தார்.

அப்போது அசம்கான் பேசியதாவது:-

நான் 9 தடவை எம்.எல்.ஏ.வாகவும், பலதடவை மந்திரியாகவும், மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளேன். சட்டசபை விவகாரத்துறை மந்திரியாக இருந்ததால், சபை நடைமுறைகளும் தெரியும்.

இருப்பினும், எனது வார்த்தைகள் யாரையாவது காயப்படுத்தி இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அவர் கூறிய சில வார்த்தைகள் சரியாக கேட்கவில்லை. எனவே, அந்த வாக்கியத்தை மீண்டும் சொல்லுமாறு அசம்கானை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டார்.

அதற்கு அசம்கான் அருகில் அமர்ந்திருந்த சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். உரிய வார்த்தைகளில் அசம்கான் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டதாகவும், அதற்கு நானே சாட்சி என்றும் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், விபத்தில் சிக்கி இருப்பதாகவும், அதுபற்றியும் பேச வேண்டும் என்றும் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, பா.ஜனதா பெண் எம்.பி. ரமா தேவி, “பெண்கள் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பேசும் பழக்கம் கொண்டவர், அசம்கான். எத்தனையோ தடவை சபைக்கு வெளியே பேசியதை, இப்போது சபைக்கு உள்ளே பேசி இருக்கிறார்” என்று கூறினார்.

மீண்டும் மன்னிப்பு கேட்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா, அசம்கானை கேட்டுக்கொண்டார். அதையடுத்து, அதே வார்த்தைகளை கூறி மன்னிப்பு கேட்ட அசம்கான், “ரமா தேவி என் சகோதரி போன்றவர்” என்று தெரிவித்தார்.

இறுதியாக, சபாநாயகர் பேசும்போது, “இந்த சபை எல்லா உறுப்பினர்களுக்கும் சொந்தமானது. உங்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் சபையை நடத்த முடியும். எனவே, கண்ணியம் காக்க வேண்டும். வார்த்தைகளை பேசும்போது கவனமாக இருப்பதுடன், மீண்டும் இதுபோன்று நடப்பதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்