காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு; பிறந்து 10 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பிறந்து 10 நாட்களேயான குழந்தை உயிரிழந்தது.

Update: 2019-07-29 11:28 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானிய படைகள் அத்துமீறி இந்திய பகுதிக்குள் துப்பாக்கி சூடு நடத்தியது.  இதில் பல வீடுகள் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் முகமது ஆரிப் (வயது 40) என்பவரும், பாத்திமா ஜேன் (வயது 35) மற்றும் பிறந்து 10 நாட்களேயான அவரது குழந்தை ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று உயிரிழந்தது.  தொடர்ந்து 2வது நாளாக இன்றும் துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.  இதற்கு இந்திய ராணுவத்தினரும் வலிமையான மற்றும் திறமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இன்று மதியம் ஷாபூர் பிரிவில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு முன்னறிவிக்கப்படாத துப்பாக்கி சூட்டில் அவர்கள் ஈடுபட்டனர்.  இதற்கு பதிலடியும் தரப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.  இந்திய ராணுவத்தின் பதிலடியில் பாகிஸ்தான் தரப்பில் பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல் உடனடியாக கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஜேன் மற்றும் ஆரிப் சிகிச்சைக்கு பின் சீரடைந்து வருகின்றனர்.  பாகிஸ்தானிய துப்பாக்கி சூடு தாக்குதலில் கடந்த 20ந்தேதி பொதுமக்களில் ஒருவர் காயமுற்றார்.  இதேபோன்று கடந்த 22ந்தேதி நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

மேலும் செய்திகள்