காஷ்மீர் பற்றிய கருத்துக்காக ப.சிதம்பரத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம்

காஷ்மீர் பற்றிய கருத்துக்காக ப.சிதம்பரத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-08-12 13:18 GMT

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலம் என்பதால்தான், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்துவிட்டது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து இருந்தார்.  அதற்காக அவருக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில்,  இது துரதிருஷ்டவசமான கருத்து. இது மக்களை தூண்டிவிடவே உதவும். இத்தனை ஆண்டுகளாக பலியானோரில் முஸ்லிம்களும் அடக்கம் என்பதை மறக்கக்கூடாது. தேசநலன் கருதியே 370–வது பிரிவு நீக்கப்பட்டது. அந்த பிரிவை பயன்படுத்தி, முஸ்லிம்களும் பாரபட்சமாக நடத்தப்பட்டனர். பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். 

சுப்பிரமணிய சாமி எம்.பி. கூறுகையில், ‘‘நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாக கூறும் காங்கிரஸ் கட்சி, இப்போது பாகிஸ்தான் நிலைப்பாட்டை பின்பற்றுகிறது’’ என்று கூறினார்.

ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு முக்தர் அப்பாஸ் நக்வி, மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், காங்கிரஸ் கட்சி அரைநூற்றுக்காண்டுக்கு முன் செய்த தவற்றை இப்போதுள்ள பா.ஜனதா தலைமையிலான அரசு திருத்தியுள்ளது. ஆனால், ப.சிதம்பரம் என்ன சொல்கிறார், நாங்கள் செய்த செயலுக்கு வகுப்புவாத சாயம் பூசுகிறார். எங்களின் இந்த செயல் தேச நலனுக்கானது என கூறியுள்ளார். சிவராஜ் சிங் சவுகான்,  காங்கிரஸ் கட்சியின் குறுகிய புத்தியைத்தான் ப.சிதம்பரம் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ப.சிதம்பரம் இந்து முஸ்லிம் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார் என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்