”என்னுடைய மனைவி தற்கொலைப் படையை சேர்ந்தவர்” -டெல்லி விமான நிலையத்தை கிடுகிடுக்க வைத்தவர்

என்னுடைய மனைவி 'தற்கொலை படையை' சேர்ந்தவர், விமான நிலையத்தில் வெடிகுண்டு வீச உள்ளார் என கணவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-17 11:20 GMT
புதுடெல்லி,

டெல்லி  சிறப்பு காவல் படைக்கு  கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஒரு மர்ம  டெலிபோன் வந்து உள்ளது. அதில் பேசியவர் எனது மனைவி ஒரு தற்கொலை படையைச் சேந்தவர் என்றும் அவர் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் கூறி உள்ளார். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்  பலப்படுத்தப்பட்டது.

புதுடெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் சர்வதேச விமானங்களின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் இந்திராகாந்தி விமான நிலையத்தில் வெடிகுண்டு வீசுவதற்காக தனது மனைவி வருவதாக அழைப்பு விடுத்த நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், டெலிபோன் செய்து மிரட்டியவர் நசிருதீன் (வயது 29 ) என்பதும் அவரது மனைவி ரஃபியா வெளிநாடு செல்வதை தடுக்க திட்டமிட்டு இதை  செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. நசிருதீன் புதுடெல்லியில் உள்ள  பவானா பகுதியைச் சேர்ந்தவர். நசிருதீன் மீது போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் சென்னையில் பை உற்பத்தி  தொழிற்சாலை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தனது ஊழியரான ரபியாவை காதலித்து  மணந்து உள்ளார். அவர் இப்போது  வளைகுடா சென்று வேலை செய்ய திட்டமிட்டிருந்தார்.

ரஃபியா இந்தியாவை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததால், தனது மனைவி விமான நிலையத்தில் குண்டுவீச்சு நிகழ்த்த வந்துள்ளதாக பொய்யான தகவலை கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்