காஷ்மீரில் ஊரடங்கு தளர்வு - ஜம்முவில் இணையதள சேவை மீண்டும் அமலுக்கு வந்தது

காஷ்மீரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ஜம்மு பிராந்தியத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.

Update: 2019-08-17 23:30 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு போன்ற நடவடிக்கைகளால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் கடந்த 5-ந்தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு, 144 தடை உத்தரவு, தொலைதொடர்பு சேவை ரத்து போன்ற கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து சுமார் 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சுமுக நிலை திரும்பி உள்ளது. எனவே அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஜம்முவின் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே நீக்கப்பட்டு இருந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் இணையதள சேவையும் மீண்டும் வழங்கப்பட்டது. அதன்படி ஜம்மு, சம்பா, கதுவா, உதம்பூர் மற்றும் ரியாசி ஆகிய 5 மாவட்டங்களில் குறைந்த வேக (2ஜி) இணையதள சேவை அளிக்கப்பட்டது.

அங்கு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து படிப்படியாக அதிவேக (3ஜி, 4ஜி) இணையதள சேவை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இணையதள சேவை வழங்கப்பட்டதால் மக்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் அவர்களிடையே ஒருவித பண்டிகைகால மகிழ்ச்சி காணப்பட்டது.

அதேநேரம் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பூஞ்ச், ரஜோரி, கிஸ்த்வார், தோடா மற்றும் ராம்பன் மாவட்டங்களில் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டு இருக்கிறது.

இதைப்போல காஷ்மீர் பிராந்தியத்திலும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. அங்கு தற்போதுதான் தொலைபேசி சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரைவழி இணைப்புகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மொத்தமுள்ள 96 தொலைபேசி அலுவலகங்களில் 17-ன் கீழ் உள்ள இணைப்புகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

இதைப்போல காஷ்மீரில் ஊரடங்கும் தளர்த்தப்பட்டு மக்களின் நடமாட்டத்துக்கான தடையும் விலக்கி கொள்ளப்பட்டது. அங்கு 35 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த தடைகள் விலக்கப்பட்டன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. சில சிறிய கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. எனினும் பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட பெரும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. ஸ்ரீநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.

கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து மாநில அரசின் செய்தி தொடர்பாளர் ரோகித் கன்சால் கூறுகையில், ‘கட்டுப்பாடுகள் தளர்த்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சாலைகளில் போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. மக்களின் நடமாட்டத்தை அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிக்கலான பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நாளை (இன்று) மாலைக்குள் தொலைபேசி இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டார்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இடங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நடந்ததாக தகவல் இல்லை எனக்கூறிய கன்சால், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்கும் விவகாரத்தில், சட்டம்-ஒழுங்கு நிலவர அடிப்படையில் உள்ளூர் அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்