இன்று கர்நாடகா செல்கிறார் பிரதமர் மோடி: ஒரேநாளில் 4 கூட்டங்களில் பங்கேற்பு

நாடாளுமன்ற 2-வது கட்ட தேர்தலையொட்டி பிரதமர் மோடி கர்நாடகாவில் 2 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.

Update: 2024-04-28 00:05 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல்கட்டமாக பெங்களூரு, மைசூரு உள்பட 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், 2-வது கட்டமாக வருகிற 7-ந் தேதி பெலகாவி, பல்லாரி, உத்தரகன்னடா, தார்வார், பாகல்கோட்டை, சிவமொக்கா, தாவணகெரே, கலபுரகி உள்பட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே முதல்கட்ட தேர்தலுக்காக பெங்களூரு, மங்களூரு, சிக்பள்ளாப்பூர், மைசூருவில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதுடன், வாகன பேரணியும் நடத்தி இருந்தார். 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள சிவமொக்கா, கலபுரகி தொகுதிகளிலும் பிரதமர் மோடி ஏற்கனவே பிரசாரம் செய்திருந்தார். இந்த நிலையில், கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தலிலும் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

அதன்படி, பெலகாவி, உத்தரகன்னடா, தாவணகெரே, பாகல்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஒரேநாளில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக கர்நாடகாவில் பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நேற்று மாலை கோவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து இரவில் பெலகாவி சாம்புரா விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்திறங்கினார். அவருக்கு, பல்வேறு சமுதாயங்களின் தலைவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெலகாவியில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலில் நேற்று இரவு பிரதமர் மோடி ஓய்வெடுத்தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பெலகாவி மாலினி சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு பெலகாவி மற்றும் சிக்கோடி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேச உள்ளார். பின்னர் பெலகாவியில் இருந்து மதியம் உத்தரகன்னடா மாவட்டம் சிர்சிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

மதியம் 1 மணியளவில் சிர்சியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி பேச உள்ளார். அதன்பிறகு, சிர்சியில் இருந்து தாவணகெரே மாவட்டத்திற்கு அவர் செல்ல உள்ளார். தாவணகெரேவில் மதியம் 3 மணியளவில் நடக்கும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். அங்கு கூட்டம் நிறைவு பெற்றதும், தாவணகெரேயில் இருந்து பல்லாரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு முன்னாள் மந்திரி ஸ்ரீராமுலுக்கு அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.பின்னர் இன்று இரவு ஒசப்பேட்டேயில் உள்ள ஓட்டலிலேயே பிரதமர் மோடி தங்குகிறார். நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் ஒசப்பேட்டேயில் இருந்து பாகல்கோட்டைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். பின்னர் பாகல்கோட்டையில் மதியம் 12.15 மணியளவில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

அந்த கூட்டம் முடிந்ததும் பாகல்கோட்டையில் இருந்து மராட்டிய மாநிலம் சொல்லப்புராவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். இதன்மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிடுவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்