மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

Update: 2019-08-19 06:03 GMT
புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். மேலும் இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில் அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ந் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வந்த தகவலையடுத்து, ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி  மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லி  உடல்நிலை குறித்து விசாரித்தனர். 

மேலும், இமாசலபிரதேச கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட முக்கிய தலைவர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று சென்று அருண் ஜெட்லி உடல் நலம் குறித்து விசாரித்தனர். தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லி உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து  அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை. இதனால் மருத்துவமனைக்கு தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் செய்திகள்