ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2019-08-21 05:51 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம்.  மத்திய நிதி மந்திரியாக அவர் இருந்தபோது 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தன.

இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுனில்கவுர் நேற்று தீர்ப்பு அளித்தார். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அதில்  டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்  மறுப்பு தெரிவித்து உள்ளது. ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு  தெரிவித்து உள்ளது. ப.சிதம்பரம் மனு  மீது  தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என நீதிபதி  என்.வி.ரமணா கூறினார்.  மேல்முறையீடு குறித்து தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் பிற்பகல் 2 மணிக்கு ப.சிதம்பரம் தரப்பு முறையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று இரவு கூட ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என சிபிஐ, அமலாக்கத்துறையினர் முயற்சித்தார்கள் என  கபில்சிபல் வாதிட்டார்.

மேலும் செய்திகள்