காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்

தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியர் பதவி விலகுவதற்காக கூறியுள்ள காரணம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

Update: 2019-08-25 07:43 GMT
திருவனந்தபுரம்,

தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான இவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை கவர்ந்தார். தற்போது மீண்டும் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீரில் 20 நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பெருவாரியான மக்கள் கவலை கொள்ளவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை வரவேற்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் அங்கு வாழும்  மக்களுக்கு உரிமை உண்டு” என்றார்.

மேலும், “மக்களின் குரலாக இருப்பதற்காக தான் நாம் பதவிக்கு வருகிறோம். ஆனால் இங்கு எங்கள் குரலே எங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. நான் பதவி விலகுவதால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்பவில்லை. எனது மனசாட்சிக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்” என்று கூறினார்.

தனது ராஜினாமா கடிதத்தை மேலிடத்திற்கு அனுப்பியிருப்பதாகவும், அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவதற்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சேரியில் வாழும் குழந்தைகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்