ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சி: வீட்டுக்காவலில் சந்திரபாபுநாயுடு

ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சி செய்ததாக சந்திரபாபுநாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் தொண்டர்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2019-09-11 23:15 GMT
அமராவதி,

ஆந்திராவில் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது மகன் நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதை கண்டித்து மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியை தெலுங்குதேச கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபுநாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டுவருவதை கண்டித்தும், ஆந்திர மாநிலம் குந்தூர் மாவட்டத்தில் பால்நாடு மண்டலத்தில் உள்ள ஆத்மகுரு கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் ஏராளமானவர்களை போலீசாரும், ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் வெளியேற்றி வருவதை கண்டித்தும் ‘ஆத்மகுருவை நோக்கி பேரணி’ என்ற போராட்டத்தை தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு அறிவித்தார். அவர் தனது கட்சி தலைவர்களுடன் அங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.

இதில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதைதொடர்ந்து அவரது கட்சி தொண்டர்கள் நேற்று திரண்டு வந்தனர்.

சந்திரபாபுநாயுடுவின் நடவடிக்கைகளால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், அவரது நடவடிக்கையினால் மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாக கூறி தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான நரலோகேசையும் போலீசார் உன்டவல்லியில் உள்ள அவரது வீட்டில் வீட்டுக்காவலில் வைத்தனர். அவரது வீட்டு முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலையில் அவரது வீட்டின் இரும்புக்கதவை போலீசார் பூட்டினர். அப்போது சந்திரபாபுநாயுடுவும், அவரது மகனும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சந்திரபாபுநாயுடுவை பார்க்க அவரது கட்சி பிரமுகர்கள் பலர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

இதேபோன்று தெலுங்குதேச கட்சி தலைவர்களான விஜயவாடா எம்.பி. கேசிநேனி ஸ்ரீநிவாஸ், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ரவீந்திரகுமார் மற்றும் அவினேஷ் உள்ளிட்ட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த முன்னாள் மந்திரி பூமா அகிலா பிரியாவை போலீசார் ஓட்டலில் சிறைவைத்தனர்.

பேரணியில் பங்கேற்க தெலுங்குதேச கட்சி தொண்டர்கள் சந்திரபாபுநாயுடு வீட்டை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர். இதனால் பல இடங்களில் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சில இடங்களில் போலீசாருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் வன்முறை ஏற்படும் என கருதிய போலீசார் நசரோபேட்டா, சீட்டினபள்ளி, பல்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவை பிறப்பித்து இருந்தனர்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்திரபாபுநாயுடு தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் இருந்து நிருபர்களிடம் கூறுகையில் “போலீசாரின் நடவடிக்கை கொடுமையானது. வரலாற்றில் இல்லாதது கூட எங்கள் கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் ஆட்சியாளர்களின் மோசமான மனநிலையை காட்டுகிறது. நான் நிச்சயமாக ஆத்மரு பயணத்தை தொடருவேன். அவர்கள் என்னை எவ்வளவுகாலம் வீட்டுக்காவலில் வைப்பார்கள் என பார்க்கிறேன். நான் எதற்கும் கவலைப்படமாட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நான் போராடுவேன். போலீசாரின் நடவடிக்கையை கண்டிக் கிறேன் என்றார்.

சந்திரபாபுநாயுடுவின் போராட்டம் குறித்து கால்நடை துறை மந்திரி வெங்கட்ரமணா கூறுகையில் ‘சந்திரபாபுநாயுடு பாதிக்கப்பட்டவர்களை பயன்படுத்தியும் தனது கட்சியினருக்கு பணம் கொடுத்து திரட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வெட்கமில்லா அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்’.

மேலும் செய்திகள்