புதிய மோட்டார் வாகன சட்டம்: லாரி டிரைவருக்கு 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார்!

டெல்லியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-09-12 17:35 GMT
புதுடெல்லி,

இந்தியா முழுவதும் மோட்டார் வாகன புதிய சட்டம்-2019, கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு ரூ.50, ரூ.100 என வசூலிக்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

மோட்டார் வாகன புதிய சட்டம் இன்னும் அமலுக்கு வராத தமிழகத்தில் கூட வாகன ஓட்டிகள் தங்களது நிலையை சரிப்படுத்திக் கொண்டுவிட்டனர். வாகன வேகம், ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் அணிதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர்.

ஏனென்றால், புதிய சட்டம் அமலாகியுள்ள பல மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் அனைவரையும் உஷார்படுத்திவிட்டன. அபராதத் தொகையை மிகக் கடுமையாக உயர்த்தியது சரியா? தவறா? என சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

குஜராத்தில், அபராத தொகை 50 சதவீதத்திற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. குஜராத்தை பின்பற்ற உள்ளதாக கர்நாடக அரசும் முடிவு செய்துள்ளது. மேற்குவங்கத்தில் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தப்போவது இல்லை என அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி முகர்பா சவுக் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான சலான் வழங்கப்பட்டுள்ளது. சலானை பார்த்த லாரி டிரைவர் மலைத்து போய்விட்டார். புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் நாட்டில் விதிக்கப்பட்ட அதிக அபராதத் தொகை இதுதான். முன்னதாக அதிகபாரம் ஏற்றி வந்த ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ.1,41,700 மற்றும் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86.500 விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்