பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை: நிதின் கட்காரி

பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்ய வேண்டியது இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

Update: 2019-09-24 02:04 GMT
புதுடெல்லி,

பேட்டரி வாகனங்களை முழுவீச்சில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டிய தேவையில்லை; பேட்டரி வாகனப் பயன்பாடு தானாகவே அதிகரிக்கத் தொடங்கிவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:- புதிய தொழில்நுட்பம் வரும்போது பழைய தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்து மறைந்துவிடுவது வழக்கமானதுதான். அடுத்த இரு ஆண்டுகளில் டீசல்களில் இயங்கும் பேருந்துகள் இருக்காது. பேருந்துகள் அனைத்தும்  பேட்டரிகள், பயோ எரிபொருள், சிஎன்ஜி உள்ளிட்டவற்றில்தான் இயங்கும்.

பேட்டரி வாகனங்களை அதிகம் பயன்பாட்டில் கொண்டு வர பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை. காலப்போக்கில் மக்களே விரும்பி பேட்டரி வாகனங்களுக்கு மாறிவிடுவார்கள். டீசலுடன் ஒப்பிடும்போது, பேட்டரி வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறைவுதான். அத்துடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் இருக்காது. இதன் காரணமாகவே பேட்டரி வாகனங்கள் அதிகம் விரும்பப்படுகின்றன” இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்