பேரழிவு வெள்ளத்திலும் சிக்கலான நேரத்தை ரசிக்கும் மக்கள்

வேதனையான சம்பவங்கள் நடக்கும் போதும் மக்கள் சோர்வடையாமல், ஐயோ... என்று புலம்பி அழுது ஒப்பாரி வைக்காமல் அந்த சிக்கலான நேரத்தையும் ரசிக்க கூடிய சிலர் இருக்கிறார்கள் என்று கூறலாம்.

Update: 2019-10-01 10:48 GMT
பாட்னா

பீகார் மற்றும், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு, மத்திய பகுதிகள் அனைத்தும் கடுமையான மழையால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.  இயல்பு வாழ்க்கை  பாதிப்பால்  மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.

தொடர் கனமழையால் பீகார் மக்கள் தத்தளித்து வரும் நிலையில், பெண் ஒருவர் தேங்கிய வெள்ள நீரில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், நகரங்களில் மார்பளவு வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களில் வெள்ளம் புகுந்து, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பீகாரில் வெள்ளம்  காரணமாக 95 மாவட்டங்களில் 758 கிராமங்களில் 464 பஞ்சாயத்து பகுதிகளில் 16,56,607 க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மீட்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 226 தற்காலிக சமையலறைகளுடன் 17 மீட்பு முகாம்களை மாநில நிர்வாகம் அமைத்துள்ளது.பள்ளிகள் இன்று வரை மூடப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளில் பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒருபக்கம் வேதனையான  இப்படிப்பட்ட  சூழ்நிலையில், தேசிய பேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (என்ஐஎஃப்டி) மாணவி ஒருவர் பாட்னாவின் நீரில் மூழ்கிய தெருக்களில் போஸ் கொடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

இப்புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் சவுரப் அனுராஜ் என்பவர் பெண்ணின் புகைப்படத்தை ‘மெர்மைட் இன் டிசாஸ்டர்’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, பாட்னாவின் தற்போதைய நிலையை தெரிவிக்கவே இதனை பதிவிட்டதாகவும், அதனை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என கூறியிருந்தார்.

'பேரழிவில் பேரழகி' என்ற தலைப்பில், சிவப்பு நிற உடையில் அதிதி சிங் என்ற மாணவி புன்னகையுடன் காட்சி அளிக்கிறார்.

இந்த புகைப்படத்தை சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்து லைக் செய்து, ஆதரவு கருத்து தெரிவித்திருந்தனர். அதேசமயம் சொந்த லாபத்துக்காக இதுபோன்று புகைப்படம் எடுத்து இயற்கை பேரழிவை ரசிக்க வேண்டாம் என சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பலர் இந்த புகைப்படத்தை பார்த்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுபோல் உத்தரபிரதேசத்திலும்  ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிரயாகராஜ் மாவட்டத்தில்  ஏற்பட்ட வெள்ளத்தின் மத்தியில் ஒரு தனித்துவமான படம் வெளிவந்துள்ளது. ஒரு வீட்டில் வெள்ள நீர் பல அடி உயரத்தில் இருக்கும்போது, அந்த வீட்டில் இருந்த தம்பதியினர் அதைக் கண்டு கவலைப்படாமல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டனர்.  

மனைவியை கைத்தாங்கலாக தண்ணீருக்குள் கணவர் பிடித்துக் கொள்ள.. மனைவி அந்த தண்ணீரில் நீச்சல் அடித்து மகிழ்கிறார். இருவருமே நீச்சலடிப்பது தங்கள் வீட்டுக்குள் புகுந்திருக்கும் மழை நீரில்தான் என்பதை மறந்துவிட்டது போல அவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள். இதை செல்போனில் வீடியோ எடுத்து ஒருவர் , இணையத்திலும் போட்டுள்ளார். 

இதுபோல் மற்றொரு படத்தில் வீட்டிற்குள் புகுந்த வெள்ளத்தில் கணவன்-மனைவி குளிக்கும் படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகியது.

மேலும் செய்திகள்