நேபாளம் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கைது

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நேபாள பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-07 21:22 GMT
காத்மாண்டு,

நேபாள நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா(61). இவர் மீது கடந்த வாரம் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

பாராளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண் போதையில் தனது வீட்டுக்கு வந்த சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா தன்னை பலவந்தமாக பாலியல் தொல்லை செய்ய முயன்று காயப்படுத்தி விட்டதாக கூறினார். மேலும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளால் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்த அவர், தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே, தான் ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.  

சபாநாயகராக இல்லாவிட்டாலும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துவரும் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை பாலியல் தொல்லை செய்ய முயன்ற வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் சமீபத்தில் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணா பஹதூர் மஹாரா-வை கைது செய்ய காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சமாக ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்