மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை பீகார் போலீசார் ரத்து செய்து விட்டனர்.

Update: 2019-10-10 00:15 GMT
முசாபர்பூர்,

இந்தியாவில் ஆங்காங்கே சிலர் கும்பலாக சென்று வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இதை கண்டித்தும், இதில் தலையிட்டு கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த கோரியும் பிரதமர் மோடிக்கு, கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி பிரபலமானவர்கள் கடிதம் எழுதினர்.

இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை எழுதி இருந்தனர்.

அதில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

இந்தியாவில் சமீபகாலமாக நடைபெற்று வரும் பல்வேறு சோக சம்பவங்களை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்து கொல்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும் மேற்பட்ட வன்முறைகள் நடந்து உள்ளன

‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமர் பெயரில் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை என்பதால் கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ என்றும், ‘நகர நக்சல்கள்’ என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் அவர்கள் கூறி இருந்தனர்.

இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வக்கீல் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டை அவமானப்படுத்துவது போன்றும், மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போன்றும் இருப்பதால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சூர்ய காந்த் திவாரி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு ஆகஸ்டு 20-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அங்குள்ள சதார் போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பீகார் போலீசாரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.

இந்த நிலையில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர்.

இதுபற்றி முசாபர்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறுகையில், 49 பேர் மீது கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை என்றும், அவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்து இருப்பதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்