ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனுக்கு எதிராக மனு: ப.சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தாக்கலான மனு மீது பதில் அளிப்பதற்கு, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-10-11 22:30 GMT
புதுடெல்லி,

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் முறைகேடு நடந்ததாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த மாதம் 5-ந் தேதி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் கைத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “ இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கிய தனிக்கோர்ட்டு நீதிபதி, இதே ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கருத்தில் கொள்ள வில்லை” என்று கூறினார்.

மேலும், “இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் தொகை சிறிய அளவிலானது; குற்றத்தின் தன்மை பெரிய அளவிலானது அல்ல என்ற தவறான அளவுகோலின் அடிப்படையில் அந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். ஆனால் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.3 ஆயிரத்து 500 கோடி அளவிலானது. எனவே கீழ்க்கோர்ட்டின் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும் வாதிட்டார்.

இதற்கு நீதிபதி, “இதே ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கில் தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு மேல்முறையீடு ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அதுவும் இந்த வழக்கில் தொடர்புடையதாக இருப்பதால், தயாநிதி மாறனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவுடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என கூறி விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது பதில் அளிக்க ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்