700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை பிடித்த போலீசார்

700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.

Update: 2019-10-14 10:47 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பென் மோடி. தமயந்தி பென் பிரதமரின் சகோதரர் பிரஹலாத் மோடியின் மகள் ஆவார்.  இவர் புதுடெல்லியின்  சிவில் லைன்ஸ் பகுதியில் குஜராத்தி சமாஜ் பவனுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை ஆட்டோவில் இருந்து இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த  2 மர்ம மனிதர்கள் அவர் கையில் வைத்திருந்த  கைப்பையை பறித்து சென்றனர். தமயந்தி கைப்பையில் சுமார் ரூ.56,000, ஒரு கைக்கடிகாரம், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் வைத்து இருந்தார்.

டெல்லியில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை டெல்லியில் இருந்து 4,762 வழிப்பறி  சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இருந்தாலும்  பிரதமர் மோடியின் அண்ணன் மகள் என்பதால் இது குறித்த விசாரணையில் போலீசின் பெரும் படையே இறங்கியது. அவரது கைப்பையை கொள்ளையடித்த இருவரை அடையாளம் கண்டு கைது செய்ய 700 போலீசார் ஈடுபட்டனர். மற்றும் 200 சிசிடிவி பதிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் இருந்து சுமார் 200 பதிவுகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். மோட்டார் சைக்கிளில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு மர்ம ஆசாமிகளையும் போலீசார் அடையாளம் கண்டனர்.  அவர்கள் ஹெல்மெட் அணியவில்லை, சி.சி.டி.வி காட்சிகள் அவர்கள் சுல்தான்புரிக்கு செல்வதைக் காட்டியது.

தொடர் விசாரணையில் போலீசார் அரியானாவின் சோனிபட்டுக்கு சென்றனர். அங்கு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் கவுரவ் (வயது 21)  சோனிபட்டைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொரு நபரான படல் சுல்தான்பூரில் போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்தும்  கைப்பையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து நான் தமயந்தி கூறியதாவது:-

டெல்லிக்கு வந்த நான் சனிக்கிழமை காலை குஜராத்தி சமாஜ் பவனை  அடைந்தேன். நான் மாலையில் குஜராத்துக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்தேன். வழிப்பறி திருடர்கள் என்னை குறிவைத்தபோது நான் ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தேன் என கூறினார்.

மேலும் செய்திகள்