சுங்க இலாகா சோதனை: கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது; 17 பேர் கைது

சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 123 கிலோ தங்கம் கேரளாவில் சிக்கியது. இதுதொடர்பாக 17 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.

Update: 2019-10-17 23:00 GMT
கொச்சி, 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து 13 குழுக்களாக பிரிந்து 23 இடங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது 123 கிலோ தங்கம், ரூ.2 கோடி பணம் மற்றும் 9,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.

மேலும் இதுதொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 15 பேர் கடத்தல் தங்கம் கொண்டு வந்தவர்கள், 2 பேர் கடத்தல் தங்கத்தை வைத்திருந்தவர்கள். இந்த கும்பல் தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, கோவையில் இருந்து கடத்தல் தங்கத்தை கொண்டு வந்துள்ளனர் என்று கேரள சுங்க இலாகா கமிஷனர் சுமித்குமார் தெரிவித்தார்.

இந்த சோதனையின்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களும் சிக்கின.

கடத்தல் தங்கம் சிக்கியது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடத்தல் தங்கம் கொண்டு வந்த கும்பலிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சென்னையை சேர்ந்தவர்கள் தான் கடத்தல் தங்கத்தை கேரளாவிற்கு சப்ளை செய்துள்ளனர். எனவே அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

பிடிபட்ட 17 பேரை தவிர 100-க்கும் மேற்பட்டோரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். முழுவிசாரணை முடிய இன்னும் 5 நாட்கள் ஆகும்’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்