வரலாற்றிலேயே முதல் முறையாக ஜம்மு உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதத்தை நெருங்கிய வாக்குப்பதிவு

ஜம்மு மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வரலாற்றிலேயே முதல் முறையாக 99.5 சதவீத வாக்குகள் பதிவாகின.

Update: 2019-10-24 22:45 GMT
ஜம்மு,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் பெரும்பாலான பகுதிகளில் ஒருவித பரபரப்பு நிலவி வருகிறது. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் ஜம்மு பிராந்தியத்தை தவிர பிற பகுதிகளில் இன்னும் முழுதாக நீக்கப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, மாநிலத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தலும் நடந்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் வட்டார வளர்ச்சி குழுக்களுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முக்கிய கட்சிகளான காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை புறக்கணித்து உள்ளன.

இந்த நிலையில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள 20 வட்டார வளர்ச்சிக்குழுக்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர் கள் ஆவர். மதியம் 1 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இந்த தேர்தலில் 99.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மொத்தமுள்ள 2,703 வாக்காளர்களில் 2,690 பேர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சுஷ்மா சவுகான் கூறினார். இதில் 1,797 ஆண்களும், 893 பெண்களும் அடங்குவர்.

மாநிலத்தில் மொத்தமுள்ள 310 வட்டார வளர்ச்சிக்குழுக்களுக்கு 1,092 பேர் களத்தில் உள்ளனர். இதில் 27 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜம்மு உள்ளாட்சி தேர்தலில் 99.5 சதவீத வாக்குகள் பதிவான சம்பவம் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். அதுவும் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் மாநிலத்தில் பரபரப்பு நிலவி வரும் இந்த நேரத்தில் அதிக வாக்குகள் பதிவாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்