370-வது பிரிவு நீக்கம் இந்தியாவின் உள்விவகாரம் - காஷ்மீரில் ஐரோப்பிய எம்.பி.க்கள் பேட்டி

370-வது பிரிவு நீக்கம், இந்தியாவின் உள்விவகாரம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என்று காஷ்மீருக்கு சென்ற ஐரோப்பிய எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

Update: 2019-10-30 21:45 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட நிலையில், அங்குள்ள நிலவரத்தை நேரில் காண்பதற்காக, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் 23 பேர், காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் சென்றனர். குண்டு துளைக்காத கார்களில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

காஷ்மீர் நிலவரம் குறித்து அவர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பொதுமக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினர். புகழ்பெற்ற தால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீநகரில் ஐரோப்பிய எம்.பி.க்கள் பேட்டி அளித்தனர். அப்போது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி மலோஸ்சி கூறியதாவது:-

370-வது பிரிவு நீக்கம், இந்தியாவின் உள்விவகாரம். பயங்கரவாதம், உலகளாவிய வியாதியாக இருப்பது கவலை அளிக்கிறது. 5 அப்பாவி தொழிலாளர்களை  பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

போலந்து நாட்டைச் சேர்ந்த ரிஸ்சார்டு சார்நெக்கி கூறியதாவது:-

சர்வதேச ஊடகங்கள் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளன. நாங்கள் எங்கள் நாட்டுக்கு திரும்பிய பிறகு, இங்கு பார்த்தவற்றை எடுத்துக் கூறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நியூட்டன் டன் கூறியதாவது:-

இந்த பயணம் எங்களது கண்ணை திறப்பதாக உள்ளது. நாங்கள் பார்த்த நிலவரத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்போம். பல ஆண்டு போருக்கு பிறகு அமைதி திரும்பிய ஐரோப்பாவில் நாங்கள் இருக்கிறோம். அதுபோல், இந்தியாவும் அமைதியான நாடாக விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தியெரி மரியானி கூறியதாவது:-

இந்தியாவுக்கு பலதடவை வந்துள்ளேன். இப்போது, உள்விவகாரத்தில் தலையிடுவதற்காக வரவில்லை. காஷ்மீர் களநிலவரத்தை நேரில் அறிவதற்காக வந்துள்ளோம். பயங்கரவாதிகளால் ஒரு நாடே அழியலாம். ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளுக்கு சென்றபோது, இதை நான் கவனித்தேன். எனவே, இந்தியாவுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்