வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் பெருமை அதுவே எங்களின் அடையாளம் - பிரதமர் மோடி பேச்சு

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் பெருமை அதுவே எங்களின் அடையாளம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2019-10-31 06:14 GMT
ஆமதாபாத்,

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல்.  படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது.  சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இதனை முன்னிட்டு ஆமதாபாத்தின் கேவாடியாவில் உள்ள 597 அடி உயரம் கொண்ட படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நடந்த ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சியையும் மோடி துவக்கி வைத்தார். 

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- 

ஒற்றுமைக்கான ஓட்டம் நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் பெருமை அதுவே எங்களின் அடையாளம்.

ஒற்றுமை தான் நமது அரசியல் சாசனத்திற்கு முன் மாதிரியாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்காக அடிமட்டத்தில் இருந்து அனைத்து அமைப்புகளையும் பலப்படுத்த வேண்டும். 

நமது தேசப்பற்றை ஆங்கிலேயர்களால் கூட தகர்க்க முடியவில்லை. இந்தியாவில் ஒற்றுமை, எதிரிநாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. 

370 பிரிவு  ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் மட்டுமே கொடுத்தது. 370-வது பிரிவு இருந்த ஒரே இடம் அதுதான். கடந்த 3 தலைமுறைகளாக 40,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பயங்கரவாதத்தால் பல தாய்மார்கள் தங்களது மகன்களை இழந்துள்ளனர். இப்போது 370வது என்ற சுவர் இடிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் பணியாற்றும் அனைத்து  அரசு ஊழியர்கள் இன்று முதல் மகிழ்ச்சியடைகிறார்கள். 7 வது ஊதியக்குழுவின் கீழ் வழங்கப்படும் சலுகைகள்  மற்ற யூனியன் பிரதேசங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் சமமாக இந்த ஊழியர்களுக்கும் கிடைக்கப்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்