ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் வாகனங்களுக்கு தீ வைத்த பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் நள்ளிரவில் வாகனங்களுக்கு பயங்கரவாதிகள் தீ வைத்தனர்.

Update: 2019-11-01 05:32 GMT
ஜம்மு,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. 

இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர்  குல்காம் மாவட்டத்தில் உள்ள போனிகம் என்ற கிராமத்தில் நள்ளிரவு 1.30 மணி அளவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். 

இரண்டு வாகனங்களில் ஒரு வாகனம் குல்கம் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அவரது வாகனம் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. சம்பவம் நடைபெற்ற போது அவர் வீட்டில் இல்லை எனக்கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்