பாஜகவுடன் பேரம் பேசுவதற்காக சிவசேனா எங்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் - சரத்பவார்

பாஜகவுடன் பேரம் பேசுவதற்காக சிவசேனா எங்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

Update: 2019-11-02 07:21 GMT
தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
மும்பை

மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் முடிவுகள் வெளியாகி இன்றுடன் 10 நாட்களாகிறது. புதிய அரசு அமைவதில் இழுபறி நிலவி வருகிறது. 

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் 161 இடங்களை பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கைப்பற்றினாலும், இரு கட்சிகளிடையே அதிகார பகிர்வில் மோதல் போக்கு நில வருகிறது.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி., மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “ஆட்சியில் 50:50 பார்முலா (சம பங்கு) அடிப்படையில்தான் மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர். இந்த திட்டம் மக்கள் மத்தியில் சென்றடைந்து உள்ளது. சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரியாக இருப்பார்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாரதீய ஜனதா உடன்பாட்டுக்கு வராத பட்சத்தில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதையொட்டி சரத்பவாரை சஞ்சய் ராவத் சந்தித்து பேசியதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"நாங்கள் சிவசேனாவுடன் சேர்ந்து  புதிய  அரசு அமைப்பது  பற்றி ஆலோசித்து  வருகிறோம் , ஆனால்  பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாக சிவசேனா அறிவிக்க வேண்டும். பாஜகவுடன் பேரம் பேசுவதற்காக சிவசேனா எங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்பது எங்கள் கருத்து. நாங்கள் அவர்களை  பாஜகவிடம் இருந்து விலகி சுத்தமாக வரக் கூறி உள்ளோம்.

காங்கிரஸ் அமையப்போகும் அரசின் அங்கமாக  இருக்காது. அதற்கு வெளியில் இருந்து அதன் ஆதரவை வழங்க வேண்டியதில்லை. மாறாக, சபையில்  நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது  காங்கிரஸ் கட்சி வாக்களிப்பதைத் தவிர்ப்பார். இது இறுதியில் 145 இடங்களிலிருந்து பெரும்பான்மை எண்ணிக்கையை 124 அல்லது 125 ஆகக் குறைக்கும், இதுமூலம் சிறுபான்மை அரசு அமையும்.

காங்கிரஸை நான் நீண்ட காலமாக அறிந்திருப்பதால் இது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதன் தேசிய தலைமை இதுவரை அத்தகைய முடிவை எடுக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும், எனக்குத் தெரியாது, ஆனால் எனது அனுபவத்தின்படி காங்கிரஸ் அத்தகைய திட்டத்தை ஒருபோதும் ஆதரிக்காது, என கூறினார்.

சரத்பவார் நவம்பர் 4 அல்லது 5 தேதிகளில் டெல்லிக்கு செல்கிறார், அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.

மேலும் செய்திகள்