காற்று மாசு அபாயத்தை கட்டுப்படுத்த டெல்லியில், வாகன கட்டுப்பாடு அமலுக்கு வந்தது

காற்று மாசு அபாயத்தை கட்டுப்படுத்தும்வகையில், டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு திட்டம் அமலுக்கு வந்தது. கார் பயன்பாட்டை குறைப்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், 2 மந்திரிகளுடன் சேர்ந்து ஒரே காரில் சென்றார்.

Update: 2019-11-04 22:45 GMT
புதுடெல்லி,

டெல்லியில், கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்தபடி இருக்கிறது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி சாலைகளில் வாகன நெரிசலை குறைத்து, காற்று மாசையும் குறைப்பதற்காக, வாகன கட்டுப்பாட்டு திட்டம் நேற்று அமலுக்கு வந்தது. ஒற்றைப்படை எண்ணில் முடியும் பதிவெண் கொண்ட 4 சக்கர வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்ணில் முடியும் பதிவெண் கொண்ட 4 சக்கர வாகனங்கள் இரட்டைப்படை தேதிகளிலும் இயக்கப்படுவதுதான் வாகன கட்டுப்பாட்டு திட்டம்.

இதில், 29 வகையான வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு. அதாவது, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வாகனங்கள், அவசரகால வாகனங்கள், பெண்கள் மட்டும் செல்லும் வாகனங்கள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், டெல்லி முதல்- மந்திரி மற்றும் மந்திரிகளின் வாகனங்களுக்கு விதிவிலக்கு கிடையாது.

இந்ததிட்டம் நேற்று அமலுக்கு வந்தது. காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை அமல்படுத்தப்பட்டது. நேற்று இரட்டைப்படை தேதி என்பதால், இரட்டை படை பதிவெண் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. திட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த, டெல்லி போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து துறை, வருவாய்த்துறை ஆகியவற்றை சேர்ந்த 600 குழுக்கள் இயங்கின.

திட்டத்தை மீறினால், ரூ.4 ஆயிரம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னர், வாகன பயன்பாட்டை குறைக்கும்வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனிக்காரில் செல்லாமல், வேறு 2 மந்திரிகளுடன் ஒரே காரில் தலைமை செயலகத்துக்கு சென்றார். துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, சைக்கிளில் சென்றார்.

வருகிற 15-ந் தேதி வரை இத்திட்டம் அமலில் இருக்கும்.

இந்நிலையில், பா.ஜனதா மூத்த தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான விஜய் கோயல், நேற்று அசோகா சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றார். ஜன்பத் அருகே அவரது காரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஏனென்றால், விஜய் கோயல் காரின் பதிவெண், ஒற்றைப்படை எண்ணில் முடிவடைவதாக இருந்தது. இதை சுட்டிக்காட்டிய போலீசார், அவருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இருப்பினும், காற்று மாசை குறைக்க 5 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் நாடகம் ஆடுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாக, தான் ஒற்றைப்படை பதிவெண் காரில் வந்ததாக விஜய் கோயல் கூறினார்.

மேலும் செய்திகள்