மராட்டியத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம் -மோகன் பகவத்திற்கு சிவசேனா கடிதம்

மராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மோகன் பகவத்திற்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது.

Update: 2019-11-05 09:39 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது. இதனால் மராட்டிய மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மோகன் பகவத் தலையிட வேண்டும் என்று சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. சிவசேனா மூத்த தலைவர் கிஷோர் திவாரி, மோகன் பகவத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்த நிலையிலும், பாஜக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க மறுத்து வருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தாமதமாகி வருகிறது.

இதனால், ஆர்எஸ்எஸ் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   எனினும், ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்து இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

மேலும் செய்திகள்