தொழிலதிபரை மிரட்டி ரூ.5 கோடி பறித்த சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு

தொழிலதிபரை மிரட்டி ரூ.5 கோடி பறித்த சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-11-09 20:07 GMT
புதுடெல்லி,

குஜராத் மாநிலம் காந்திநகரில் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டராக சுனில் நாயர் என்பவர் கடந்த ஆண்டு பணியாற்றி வந்தார். அப்போது, அந்த மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் சைலேஷ் பட் என்பவரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்தார். ‘பிட்காயின்’ வர்த்தகத்தில் ஈடுபட்டு சைலேஷ் பட் கருப்பு பணம் குவித்திருப்பதாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் மிரட்டினார்.

எனவே, அமைதியாக இருக்க வேண்டுமானால், தனக்கு ரூ.10 கோடி லஞ்சம் தருமாறு வலியுறுத்தினார். பேரம் பேசிய பிறகு, இது ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டது. அடிக்கடி தொலைபேசி மூலம் மிரட்டியதால், சைலேஷ் பட் 2 தவணைகளாக ரூ.5 கோடி கொடுத்தார்.

இதற்கிடையே, இதுதொடர்பாக சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணை நடத்தியதில், சுனில் நாயர் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. சைலேஷ் பட் மீது ‘பிட்காயின்’ வர்த்தகம் தொடர்பாக எந்த விசாரணையும் நடக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரி சுனில் நாயர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்