மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி- சஞ்சய் ராவத்

மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை திணிப்பது பாஜகவின் ஒரு உத்தியாக இருக்கும் என சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.

Update: 2019-11-11 05:12 GMT
மும்பை,

மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தன. தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றன. ஆனால், முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற சிவசேனாவின் தொடர் பிடிவாதம் காரணமாக பாஜகவால்  ஆட்சியமைக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து மராட்டிய கவர்னர், சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். சிவசேனா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தமது கட்சிக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவையும், ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தையும் இன்றிரவு 7.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என கவர்னர் பகத்சிங் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து சிவசேனா மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்  கூறியதாவது:-

மராட்டியத்தில் அரசு அமைக்க மறுப்பது பாஜகவின் ஆணவம். இது மராட்டிய  மக்களுக்கு அவமானம். அவர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தயாராக உள்ளனர். ஆனால் 50-50 சூத்திரத்தைப் பின்பற்ற அவர்கள் தயங்குகிறார்கள். ஆனால் அவர்கள் தேர்தலுக்கு முன்பு ஒப்புக்கொண்டனர்.

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க  சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்து உள்ளார். கவர்னர் எங்களுக்கு அதிக நேரம் கொடுத்திருந்தால் எளிதாக இருந்திருக்கும். பிஜேபிக்கு 72 மணி நேரம் வழங்கப்பட்டது. எங்களுக்கு குறைந்த நேரமே  வழங்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை  திணிப்பது பாஜகவின் ஒரு உத்தியாக இருக்கும் என கூறினார்.

மேலும் செய்திகள்