நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தால் 6 மணி நேரம் சிக்கி தவித்த மந்திரி

நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தால் 6 மணி நேரமாக மாநில மந்திரி சிக்கி தவித்தார்.

Update: 2019-11-11 12:23 GMT
மும்பை,

கல்விக் கட்டண உயர்வு, ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மாணவர்கள், போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டிச் செல்ல முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவிசாய்க்க வேண்டும் என மாணவர்கள் குரல் எழுப்பினர்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கட்டிடத்தை நோக்கி மாணவர்கள் அணிவகுத்து சென்றனர். அங்கு  கலையரங்கில் துணை  ஜனாதிபதி வெங்கையா நாயுடு  கலந்து கொண்ட  நிகழ்ச்சி நடைபெற்றதால்  பலத்த போலீஸ் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாணவர்களை  தடுத்து நிறுத்த தடைகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவர்கள் போராட்டத்தால் மாநில மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி  ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அங்குள்ள ஏ.ஐ.சி.டி.இ ஆடிட்டோரியத்திற்குள் சிக்கி தவிக்க நேரிட்டது. 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுடன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக போக்ரியால், அங்கு சென்றிருந்தார். 

மந்திரியால் மாலை 4-15  மணிக்கு தான் அங்கிருந்து வெளியேற முடிந்தது. இதனால் மந்திரியின் 2 நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்