மராட்டியத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி அமல் - மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ராம்நாத் கோவிந்த் உத்தரவு

மராட்டியத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

Update: 2019-11-13 00:15 GMT
புதுடெல்லி,

மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களை கைப்பற்றியது.

எதிர்தரப்பில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங் களிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சிறிய கட்சிகள் 16 இடங்களிலும், 13 சுயேச்சை எம்.எல்.ஏ.க் களும் வெற்றி பெற்றனர்.

288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 161 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2½ ஆண்டுகள் தர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது, ஆட்சியில் சமபங்கு என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இரு கட்சிகள் இடையே பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறியது.

ஆனால் பாரதீய ஜனதா இதை திட்டவட்டமாக மறுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க முடியுமா? என்று பாரதீய ஜனதாவிடம் கவர்னர் பகத்சிங் கோஷியாரி கடந்த சனிக்கிழமை கேட்டு அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் தங்களுக்கு போதிய ஆதரவு இல்லாததால் ஆட்சி அமைக்க இயலாது என்று மறுநாள் பாரதீய ஜனதா தலைவர்கள் கவர்னரை சந்தித்து தெரிவித்து விட்டனர்.

உடனடியாக 2-வது பெரிய கட்சி என்ற முறையில் சிவ சேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு 7.30 மணி வரை கவர்னர் அவகாசம் வழங்கி இருந்தார்.

இதையடுத்து முதல்-மந்திரி பதவியை என்ன விலை கொடுத்தாவது பெற்றே தீருவோம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார். சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க அந்த கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவை நேரடியாக நாடினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை போனில் தொடர்பு கொண்டும் பேசினார். ஆனால், அந்த இரு கட்சிகளும் ஆதரவு கடிதம் கொடுக்காததால், கவர்னரிடம் சிவசேனாவால் சமர்ப்பிக்க முடியவில்லை.

கவர்னரை நேரில் சந்தித்த உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே 3 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு கேட்டார். ஆனால் சிவசேனா கோரிக்கையை நிராகரித்த கவர்னர் உடனடியாக 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார், கவர்னரை சந்தித்து பேசினார்.

இவ்வாறு அடுத்தடுத்த ஏற்பட்ட அரசியல் திருப்பங்கள் நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது.

காங்கிரஸ், சிவசேனா ஆதரவு இல்லாமல் தங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், இது தொடர்பாக முடிவு எடுக்க சரத்பவாருக்கு தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிகாரம் வழங்கி இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறினார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை சரத்பவார் சந்தித்து பேசினார்.

மற்றொரு புறம் சரத்பவாரை போனில் தொடர்பு கொண்ட சோனியா காந்தி, ஆட்சி அமைக்கும் விவகாரம் குறித்து அவருடன் பேச தனது கட்சி சார்பில் 3 பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக கூறினார்.

அதன்படி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் மும்பை அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மாலையில் மும்பை வந்து சேர்ந்தனர்.

சரத்பவார் கட்சியின் முடிவுக்காக நேற்று இரவு 8.30 மணி வரை கவர்னர் கெடு விதித்து இருந்தார். ஆனால் திடீர் திருப்பமாக பிற்பகலில் அவர் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசின் உள்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். அரசியலமைப்பு சட்டப்படி மாநிலத்தில் அரசு அமைக்க முடியாததால், 356-வது விதியின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு அந்த பரிந்துரையில் கவர்னர் கேட்டுக்கொண்டார்.

கவர்னர் பரிந்துரை அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில், மராட்டிய கவர்னரின் பரிந்துரை குறித்து ஆலோசிக்கப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மத்திய மந்திரி சபை பரிந்துரையை அனுப்பியது.

மத்திய மந்திரி சபையின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று மாலை 5.30 மணி அளவில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தார்.

இதன் மூலம் மராட்டியத்தில் தேர்தல் முடிவு வெளியான நாள் முதல் நேற்று வரை 20 நாட்களாக நடந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.

இனி கவர்னர் பகத்சிங் கோஷியாரி தலைமையில் மராட்டிய அரசின் நிர்வாகம் நடைபெறும். அவர் தனக்கு உதவியாக சில ஆலோசகர்களை நியமித்து கொள்வார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டசபை இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் முடக்கி வைக்கப்பட்டு இருக்கும்.

அடுத்து போதிய ஆதரவுடன் ஆட்சி அமைக்க யாரும் முன்வந்தால், ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, புதிய அரசு பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் சட்டசபைக்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும்.

மேலும் செய்திகள்